ஜூன் 26, 2024 • Makkal Adhikaram
தமிழக அரசு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .அதில் புதுக்கோட்டை நகராட்சி அதனுடன் சேர்ந்த 11 கிராமங்கள் சேர்த்து மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டது. இதற்கு இந்த 11 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிராமங்களை மாநகராட்சியாக மாற்றினால் கிராமத்தின் வருமானம் மாநகராட்சி வருமானத்தோடு ஒப்பிட முடியுமா? கிராம பகுதியில் வாழ்கின்ற மக்களின் வருமானம் என்ன? மாநகராட்சி பகுதியில் வாழுகின்ற மக்களின் வருமானம் என்ன? மக்களின் வருமானத்தை கணக்கிட்டு வாழ்வாதாரத்தை கணக்கிட்டு .பேரூராட்சி ,நகராட்சி ,மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் தான் மக்கள் அங்கே அதன் வரிச் சுமைகளை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியும்.
கூலி வேலைக்கு செல்பவர்கள் நிலங்களில் இருந்தும், அதனால் எந்த வருமானமும் இல்லாமல் அவர்கள் வரி கட்டி கடனாளியாக்கப்படுவார்கள். இப்படி தான் ஆவடி நகராட்சியாக இருந்ததை ,மாநகராட்சியாக தரம் உயர்த்தியாதால், இன்றும் வரி கட்டி எங்களால் சமாளிக்க முடியவில்லை என்கிறார்கள். இங்கே யாரெல்லாம் பயன் பெறுகிறார்கள்? அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு. அடுத்தது ரியல் எஸ்டேட் வியாபாரிகள் நன்றாக பணம் பார்க்கும் வேலையால், நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிடும் . பத்திரப்பதிவு துறையில் வருமானம் அதிகரிக்கும். அதிகாரிகளும், வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். ஆனால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் அது எப்படி ?
கிராமங்களில் உள்ள 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் . வீட்டு வரி ,தண்ணீர் வரி ,கழிவு நீர் வரி,குப்பை வரி, இந்த வரிகள் எல்லாம் உயர்த்தி விடுவார்கள். வசதி வாய்ப்பு உள்ளவர்கள் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் நடுத்தர மக்கள் இவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு இந்த மாநகராட்சி தேவையில்லை.
தேவையற்ற ஒரு திணிப்பை எதற்கு அரசாங்கம் மக்களிடம் இதை திணிக்கிறது? இப்படி திணித்தால் தான் மத்திய அரசின் மாநகராட்சிக்கான நிதியை பெற முடியும். அதாவது ஒரு மாநகராட்சிக்கு சுமார் 500 கோடிக்கு மேல் நிதி கொடுக்கிறார்கள் .அதை வைத்து கணக்கு காட்டி மக்களை ஏமாற்றலாம். மக்கள் எவ்வளவு காலம் ஏமாறுவார்கள்? தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதனால், மாநகராட்சியால் 11 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. பாதிப்புகள் தான் அதிகம் என்பதை மக்கள் புரிந்து தான் அதை போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசாங்கம் ஏதோ பெரிய திட்டத்தை மக்களுக்கு செய்வதுபோல் காட்டிக்கொள்கிறது.மக்கள் உரிமைப் பிரச்சனையை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாவட்ட ஆட்சியர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. மேலும் கார்ப்பரேட் ஊடகங்களும் அப்படித்தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் .உண்மையில்லை. மக்கள் சரியாக தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் நீதிமன்றத்தை அணுகி இதற்கு தடை ஆணை வாங்க வேண்டும். மேலும், அந்த ஊரட்சி பகுதிகள் மாநகராட்சிக்கு தரம் உயர்த்த தகுதியா? என்பதை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும் . அதன் பிறகு தான் அவர்கள் அதை செயல்படுத்த முடியும். அதனால், மக்கள் இப்படி ஒரு தவறான சட்டத்திற்கு குரல் கொடுத்து போராட வேண்டி தான் உள்ளது .மக்களின் உரிமைப் பிரச்சினை பறிபோகும் போது, மக்கள் போராடுவது தவிர, வேறு வழியில்லை .