ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram
விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண நிபுணர் குழு அமைக்கிறது சுப்ரீம் கோர்ட் .

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த பல விவசாய சங்கங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன; டில்லி நோக்கி பேரணி செல்வதற்கு முயன்றன. பஞ்சாபின் அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையில், கடந்த பிப்., 13ல் ஹரியானா அரசு தடுப்புகள் அமைத்து, அவர்கள் முன்னேறி செல்வதை தடுத்தது.

இதையடுத்து எல்லையில், தேசிய நெடுஞ்சாலையில் தங்கள் வாகனங்களுடன் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த, ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றம், தடுப்புகளை அகற்றும்படி ஹரியானா அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஹரியானா அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த், திபாங்கர் தத்தா, உஜ்ஜல் புய்யான் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்துவதற்கு, பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழு ஒரு வாரத்துக்குள் அமைக்கப்படும். விவசாயிகள் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து ஆராய்ந்து நிரந்தரத் தீர்வு கிடைப்பதற்கான பரிந்துரையை இந்தக் குழு அளிக்கும்.

இந்த குழு விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகள் தங்கள் அறிக்கைகளை மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், குழுவில் இடம்பெற வேண்டியவர்கள் குறித்த பரிந்துரையையும் அளிக்கலாம்.
இதற்கிடையே, பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினருடன் பேசி சமாதானப்படுத்தி, போராட்டத்தை கைவிட முயற்சி மேற்கொள்ள வேண்டும். அது தொடர்பான அறிக்கையையும் மூன்று நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.