நாட்டில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புக்கள், செயல்படுத்த முடியாமல் பொதுமக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளது. அதனால் இனி எந்த அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச அறிவிப்புகளை அறிவித்தாலும் ,அதை தடை செய்து, இலவச அறிவிப்புக்கள்,அற்ற தேர்தலை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும்.மேலும்,
இந்த இலவச அறிவிப்புக்கள் அரசியல் கட்சிகள் யாருடைய பணத்தில் இதை அறிவிக்கிறார்கள்? என்பதை எந்த அரசியல் கட்சியினாலும், அதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இந்த இலவச அறிவிப்புகளுக்கு உழைக்கும் ஒவ்வொரு மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது. அது தவறான ஒன்று. ஒருவன் உழைத்துப் பெற வேண்டியதை, இன்னொருவன் உழைக்காமல் இலவசமாக பெறுவது எந்த விதத்தில் அதை சட்டம் அனுமதிக்கிறது?
அடுத்தது இலவசம் என்ற பெயரில் அதற்கான போடும் திட்டங்கள் கொடுக்கும் பொருட்கள் தரமானதாக மக்களுக்கு இருப்பதில்லை. அதில் ஊழல்கள் தான் இதுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது கடந்த திமுக ஆட்சியில் இருந்து, அதிமுக ஆட்சி வரை கொடுக்கப்பட்ட இலவச பொருட்களின் தரத்தை எடுத்துப் பார்த்தால் ,அது வாங்கிய பொது மக்களுக்கே இந்த உண்மை புரிந்து விடும். இது தவிர, இந்த இலவச அறிவிப்புகள் மூலம் பெரும்பகுதி அதில் அந்தந்த ஆட்சியாளர்களுக்கும், அந்தந்த அரசியல் கட்சிகளுக்கும், நிதி ஒதுக்குவதுபோல் 75% அங்கே போய் சேர்ந்து விடுகிறது.
இதில் 25 சதவீதம் மட்டுமே மக்களிடம் போய் சேருகிறது. அதனால், இந்த இலவச அறிவிப்புகளால், மக்களும் பயனடைய போவது ஒன்றும் இல்லை. ஆனால், மக்கள் வரிப்பணம் மட்டும் மறைமுகமாக சுரண்டப்படுகிறது. இது தவிர, இந்த இலவச அறிவிப்புகளால் வாக்காளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அதை தடுக்க உடனடியாக தேர்தல் ஆணையம் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் எதுவும், ஒழுங்கான முறையில் செயல்படுத்தவில்லை. அடுத்தது கர்நாடகாவில் இலவச அறிவிப்புகளால், இன்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது .இந்த இலவச அறிவிப்புகள் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்து செய்தால் பரவாயில்லை. அல்லது அவர்களுடைய கட்சி பணமாக இருந்தாலும் பரவாயில்லை.
உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் இலவசமாக ஒருவருக்கு எல்லாம் கொடுத்து விட்டால், அவன் எந்த வேலையும் செய்யாமல், சோம்பேறித்தனமாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்பான். இதனால் நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம் நிச்சயம் பாதிக்கப்படும். ஒரு மனிதனுக்கு முன்னேற்றத்திற்காக என்ன வழிகளை செய்ய வேண்டுமோ அதை செய்தாலே, அரசியல் கட்சிகள் போதும்.
இந்த இலவச அறிவிப்புக்கள் அனைத்தும் ஊழலுக்கு வழிவகை செய்யும் இலவச அறிவிப்புகளாக தான் இன்று வரை இருந்து வருகிறது. இதை உடனடியாக தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் சொத்து கணக்கு, தேர்தல் செலவு கணக்கு, இவை அனைத்தையும் எடுத்து மக்கள் முன் வைக்க வேண்டும்.
தேர்தல் பிரச்சாரங்கள் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்களை கொடுப்பதை தடுக்க வேண்டும். தேர்தலைப் பற்றி தெரியாத மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும். இது தவிர ,எந்த அரசியல் கட்சியினரும் வீடுகளுக்கு சென்று வாக்கு கேட்பது, வழியில் சென்று வாக்கு கேட்பது, போன்ற எந்த விதமான செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? அவை அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் மூலம், தேர்தல் ஆணையமே அதைப்பற்றி மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். அதற்கான செலவினங்கள் அனைத்தும், அந்தந்த அரசியல் கட்சிகளிடமே தேர்தல் ஆணையம் வசூல் செய்ய வேண்டும்.
தவிர, ஊழல் வழக்கு, குற்ற பின்னணி வழக்கு, மோசடி வழக்கு ,எந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும் ,அல்லது இது சம்பந்தமாக அவர் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். இப்படி தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்தால் தான், நாட்டில் தகுதியானவர்களையும், மக்களுக்காக உழைப்பவர்களையும், நாட்டில் ஊழல் அற்ற ஆட்சியும் நிர்வாகத்தையும் கொடுக்க முடியும் .
அதற்கு தேர்தல் ஆணையத்தின் பங்களிப்பு மிகவும் அவசியம். நாட்டின் தேர்தல் என்பது கடமைக்கு நடத்தும் தேர்தல் அல்ல, அப்படிப்பட்ட தேர்தல் நடத்த வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல் என்பது மக்களின் உரிமை. அந்த உரிமையை கொடுக்கும் மக்களுக்கு, அதற்கு தகுதியானவர்கள் தேவை, அதற்கு தகுதியானவர்கள் மூலம் ,மக்களின் உரிமையை தேர்தல் மூலம் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பெற முடியும்.
அப்படி பெறக்கூடிய உரிமையை, அதாவது அதை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் என்பது நாட்டில் எவ்வளவு முக்கியத்துவம் ஆனது என்பதை தேர்தல் ஆணையம் இன்னும் ஏன் புரிந்து கொள்ளவில்லை?
அதனால், தேர்தல் ஆணையம் நிச்சயம் இதைப் பற்றி தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை எடுக்க நாட்டு மக்கள் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும், தமிழ் நாடு பனை மரங்கள் கூட்டமைப்பு சார்பிலும் ,பல தொண்டு நிறுவனங்கள் சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் முக்கிய கோரிக்கை.