அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram
நாமக்கல் மாவட்ட டவுன் காவல் நிலைய எல்லையில் நேற்று பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் ரகசிய தகவலின் அடிப்படையில் பிடித்துள்ளனர்.இதில், பிடிப்பட்டவர்களிடம் ஒருவரிடம் மட்டும் முறையாக பாஸ்போர்ட், விசா இருந்துள்ளது. மற்றவர்களிடம் இல்லாததால் அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “கடந்த 9 மாதங்களாக நாமக்கல் டவுன் காவல் நிலைய எல்லையான விசாணம் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மொகமது முல்லா, அனிக்ஷ் பாசில், இஸ்லாம் முகமது மற்றும் அவரது நண்பர் ஒருவர் என 4 பேர் வீடு வாடகைக்கு எடுத்து கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதுதொடர்பாக தீவிரவாத குழுவை கண்டறியும் பிரிவிலிருந்து நாமக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்மூலம் சம்பந்தப்பட்ட 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஒருவரிடம் மட்டும் பாஸ்போர்ட் இருந்துள்ளது. மற்றவர்களிடம் ஏதும் இல்லாததால், பாஸ்போர்ட் உள்ள நபரை தீவிர விசாரணைக்கு பின் பங்களாதேஷ்க்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 3 பேரையும் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக தீவிரவாதிகளை கண்டறியும் மற்றும் தடுத்து நிறுத்தும் பிரிவினர், தேசிய புலனாய்வு முகமை (NIA) மேற்கண்ட 3 பேரிடமும், கடந்த 9 மாதங்களாக நாமக்கல்லில் என்ன செய்தார்கள், இவர்களை அழைத்துவந்தது யார்? தீவிரவாத கும்பலுடன் ஏதும் தொடர்பில் உள்ளார்களா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.