செப்டம்பர் 28, 2024 • Makkal Adhikaram
நாமக்கல் அடுத்த காட்டுப் பகுதியில் எஸ்ஐ ரஞ்சித் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி இருவரும் கொள்ளையர்களை துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.காடு போன்ற அந்தப் பகுதியில் ஒரு ஓடை குறுக்கிடுகிறது. அதைத் தாண்டி அஸ்ரூ ஓடிவிடுகிறான். ஜூமான் அங்கே தடுமாறி விழுகிறான். அவரைப் பிடிக்கப்போன எஸ்.ஐ.,யை அவர் தாக்குகிறான். இதனால் எஸ்.ஐ.,யின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறார். அதில் ஜூமான் இறந்து விடுகிறான்.”
மேலும்,இது பற்றி நாமக்கல் குமாரபாளையம் அருகே, செப்ம்பர் 27ஆம் தேதியன்று காலை 10:30 மணியிலிருந்து 10:45 மணிக்குள் நடந்த அந்தச் சம்பவம் குறித்து சேலம் சரக டிஐஜி உமா, பத்திரிகையாளர்களிடம் விவரித்தார்.அப்போது,தமிழ்நாட்டில் என்கவுன்டர் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தச் சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி. உமா கூறுவது என்ன? போலீஸ் அதிகாரிகளும் கூறியதன்படி, கேரளாவிலும், அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் நடந்த சம்பவங்கள் என்ன?கேரளாவில் இருந்து நாமக்கல் போலீசுக்கு கிடைத்த தகவல் .
செப்டம்பர் 26ஆம் தேதியன்று, திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் மெஷின்கள் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, கேஸ் வெல்டிங் மெஷின் துணையுடன், ஏடிஎம் இயந்திரத்தின் மேல் பாகம் மட்டும் அகற்றப்பட்டு, பணம் சேதமாகாத வகையில் சாதுர்யமாகக் கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதன்பின், அந்தக் கொள்ளையர்கள் பணத்துடன் தப்பி ஓடியுள்ளனர்.மேலும்,
அந்தப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை திருச்சூர் போலீசார் ஆய்வு செய்தபோது, கிரெட்டா காரில் வந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் தமிழகத்தை நோக்கிச் செல்கிறார்கள் என்று தெரிந்ததும், செப்டம்பர் 27ஆம் தேதி காலை 6 மணியளவில், திருச்சூர் எஸ்.பி., நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ் கண்ணாவை அழைத்து, இந்தத் தகவலைச் சொல்கிறார். அவர் மேலதிகாரிகளுக்குத் தகவல் சொல்லிவிட்டு, அவருடைய கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவலைப் பகிர்ந்து, வாகன சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டதாக டிஐஜி உமா கூறினார்.
மேலும், உடனடியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், போலீசார் வாகனங்களை நிறுத்திச் சோதனையிடத் தொடங்கியதாகவும் அடுத்த ஒரு மணிநேரத்திலேயே, மீண்டும் கேரளா போலீசார், நாமக்கல் எஸ்.பி.,யை அழைத்து, அந்த கார் ஒரு கண்டெய்னர் லாரிக்குள் ஏற்றப்பட்டு வருவதாகத் தகவல் தெரிவித்ததாகவும் டிஐஜி உமா கூறினார்.
அதனால் கண்டெய்னர் லாரிகளை நிறுத்திச் சோதனையிடவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. அன்று காலை 8:45 மணியளவில், நாமக்கல் போலீசார், குமாரபாளையம் சாலையில் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது, ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி, போலீசார் நிறுத்தியும் நிற்காமல் சென்றது. உடனடியாக போலீசார் அந்த லாரியை, இருசக்கர வாகனங்களில் துரத்தினர்.
சங்ககிரி நோக்கி வேகமாகச் சென்ற அந்த லாரி, அங்கே டோல்கேட் இருப்பதால், அதன் வழியே செல்லாமல் மீண்டும் சென்ற வழியிலேயே திரும்பி வந்தது. இருமுறை சங்ககிரி நகரைச் சுற்றிவிட்டு, வெப்படை என்ற ஊரை நோக்கிச் சென்ற அந்த லாரியை பற்றிய தகவல், அதற்குள் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் ‘அலர்ட்’ செய்யப்பட்டது,” என்று டிஐஜி உமா விவரித்தார்.
காவல்துறையின் கூற்றுப்படி, சந்நியாசிபட்டி என்ற இடத்துக்கு அருகில், ‘யு டர்ன்’ செய்யும்போது, ஒரு கார், இரண்டு பைக் ஆகிய வாகனங்களின் மீது மோதிவிட்டு, லாரி நிற்காமல் வேகமாகச் சென்றது.
இதனால் அங்குள்ள மக்களும் அந்த வண்டியை நோக்கி கல் எறிந்ததாகவும், அந்த லாரியை போலீசார் மடக்கி நிறுத்தி, டிரைவரை இறக்கி விசாரித்ததாகவும் காவல்துறை கூறுகிறது.அந்த லாரி கேபினில், டிரைவர் ஜூமான் என்பவருடன் சேர்த்து 5 பேர் இருந்துள்ளனர். அப்போதுதான் அந்த லாரி, திருச்சூரிலிருந்து வந்தது என்பது தெரிய வந்தது.
லாரியை அங்கிருந்து நகர்த்தி வெப்படைக்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, லாரியின் பின்னால் போலீசார் போகும்போது, பின்புறத்திலிருந்து சத்தம் அதிகமாக வந்ததாக காவல்துறை கூறுகிறது.கண்டெய்னரின் பின்புறத்தில் இருந்த கார்
லாரியின் பின்புறத்தைச் சோதனையிட்டபோது, அதற்குள் நம்பர் பிளேட் இல்லாத கிரெட்டா காரும் கூடுதலாக இரு நபர்களும் இருந்ததைக் கண்டுபிடித்ததாக காவல்துறை தெரிவித்தது.அந்த இருவரும் அஸ்ரூ, ஜூமான் எனக் கூறிய டிஐஜி உமா, இருவரும் தப்பி ஓட முயன்றதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் நீல நிற பேக் ஒன்றைத் தூக்கிக்கொண்டு அஸ்ரூ ஓடியதாகவும் கூறினார்.
மேலும், “அந்த நேரத்தில், டிரைவர் ஜூமான், தனது கையிலிருந்த லாரி பழுது பார்க்கும் கருவியை ஆயுதமாகப் பயன்படுத்தி, இன்ஸ்பெக்டர் தவமணியைத் தாக்கிவிட்டு ஓடினார். அவர்களைத் துரத்திக்கொண்டு, எஸ்ஐ ரஞ்சித்ஓடினார், அவருக்குப் பின்னால் தவமணியும் ஓடினார்” என்று தெரிவித்தார்.
தப்பியோடியவர்கள், காடு போன்ற பகுதிக்குள் நுழையும்போது, ஓர் ஓடை குறுக்கிட்ட சமயத்தில், தவறி விழுந்த ஜூமானை பிடிக்க முயன்ற எஸ்.ஐ. ரஞ்சித்தை, ஜூமான் தனது கையிலிருந்த ஆயுதத்தால் தாக்கவே, எஸ்.ஐ.யை காப்பாற்ற, இன்ஸ்பெக்டர் தவமணி துப்பாக்கியால் சுட்டதாக டிஐஜி உமா செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
அதில், ஜூமான் இறந்துவிடவே, “அந்த நேரத்தில் போலீசாரை நோக்கிக் கற்களை எறிந்து தாக்கிய அஸ்ரூவை, இன்ஸ்பெக்டர் காளி சுட்டுக் கைது செய்ததாகவும்” அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை விவரித்தபோது டிஐஜி உமா, இவர்களைப் பற்றி இன்னும் பல தகவல்களையும்பகிர்ந்தார்.இவர்களில் ஐந்து பேர் ஹரியாணாவின் பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; இருவர், அதற்கு அருகிலுள்ள நுா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏடிஎம் மெஷின்களை கேஸ் வெல்டிங் மெஷின்களை வைத்து அறுத்தெடுத்து, பணத்தைக் கொள்ளையடிப்பதுதான் இவர்களின் தொழில். அதிலும் குறிப்பாக, ஸ்டேட் பேங்க் ஏடிஎம்களில் அதிகமாகப் பணம் நிரப்பப்படுவதால், அந்த மெஷின்களையே அதிகமாகக் குறி வைத்து, கொளளையடித்துள்ளனர்,” என்று கூறினார்.
மேலும், “ஹரியாணாவில் இருந்து புறப்பட்டு, டெல்லியில் லோடுடன் புறப்பட்ட கண்டெய்னர் லாரியில் 5 பேர் வந்துள்ளனர். அதற்குப் பிறகு,கிரெட்டா காரை எடுத்துக்கொண்டு இருவர் வந்துள்ளனர். லாரியை சென்னையில் ‘அன்லோடு’ செய்துவிட்டு, திருச்சூர் சென்றுள்ளனர். அங்கு கூகுள் மேப் உதவியுடன், ஏடிஎம் மெஷின்களை குறித்து வைத்துக்கொண்டு, காரில் சென்று கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்,” என்றும் விளக்கினார்.
காவல்துறையின் கூற்றுப்படி, கண்டெய்னர் லாரியை ஓரிடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, காரில் கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு, லாரி இருக்கும் இடத்துக்குச் சென்றுள்ளனர். சிறிது துாரம் சென்றபின், ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் காரை கண்டெய்னரில் ஏற்றிக் கொண்டு, எல்லோரும் ஹரியானாவுக்கு திரும்பிப் போகத் திட்டமிட்டு, இந்தச் சாலையில் வந்துள்ளனர்.
பவாரியா கும்பலுடன் தொடர்பு உள்ளதா?இதற்கு முன்பாக, இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏடிஎம்களில் கொள்ளையடித்த, இதே ஹரியாணா மாநிலத்தின் மேவத் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளோம் எனக் குறிப்பிட்டார் டி.ஐ.ஜி உமா.
அவர்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. இவர்கள் ஏழு பேர் மீதும் வேறு எந்த வழக்குகளும் தமிழகத்தில் இருப்பதாகத் தகவல் இல்லை. என்கவுன்டர் என்பதால், நீதி விசாரணை நடக்கிறது. அதனால் பணம் எவ்வளவு இருந்தது என்று இன்னும் எண்ணவில்லை. காயம் அடைந்த அஸ்ரூவுக்கு கோவையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை விசாரித்து வருகிறோம். இறந்தவரின் குடும்பத்துக்கும் தகவல் தர முயற்சி செய்து வருகிறோம்.
அந்த லாரிக்குள் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருந்ததா என்று இன்னும் சோதனையிடவில்லை. தற்போது தடயவியல் வல்லுநர்கள் அதை ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களுக்கும் பவாரியா கும்பலுக்கும், அல்லது வேறு எந்தத் தீவிரவாதக் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களின் இலக்கு, ஏடிஎம்களில் பணம் திருடுவது மட்டும்தான்; ஆனால் மேல் விசாரணையில்தான் மற்ற விவரங்கள் தெரியவரும்” என்றார்.மெயின் ரோட்டில் அவர்களை விசாரிக்காமல், காட்டுப்பகுதிக்குச் சென்று விசாரித்ததற்குக் காரணம் என்ன, இது திட்டமிட்ட என்கவுன்டரா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ”கார் மற்றும் பைக்குகள் மீது மோதி, விபத்து ஏற்படுத்துவதற்கு முன்பே, போலீசாருக்கு அந்த லாரி பற்றித் தகவல் வந்துவிட்டது. அவர்கள் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று நினைத்தே, லாரியை வேகமாக ஓட்டியிருக்கிறார்கள். அதில்தான் விபத்து நடந்துள்ளது.
பெட்ரோல் பங்க் அருகே, ‘யு டர்ன்’ அடிக்கும்போது, காரை 250 மீட்டர் துாரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனர். வண்டியை நிறுத்தி விசாரிக்கும் வரையிலும், அதற்குள் கார் மற்றும் இரண்டு ஆட்கள் இருப்பது போலீசாருக்கு தெரியாது. காற்று போவதற்காக கண்டெய்னரின் பின்புறத்தில் சில மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர்” என்றார் டிஐஜி உமா.
இறந்துபோன ஜூமான், 40 வயதுடையவர். காயம்பட்ட அஸ்ரூவுக்கு 28 வயது. இவர்களைத் தவிர்த்து, பல்வால் மாவட்டம் சோப்தா கானை சேர்ந்த ஷக்கூர் மகன் இர்பான், குடாலியை சேர்ந்த 26 வயதான லியாகத் கான் மகன் சபீர்கான், மலாய் கிராமத்தைச் சேர்ந்த சுபான்கான் மகன் ஷவ்கீன், லக்னாகா கிராமத்தைச் சேர்ந்த பாரூம் மகன் முபாரக், நுா மாவட்டம் பீஸ்ரூ கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீதுவின் மகன் 42 வயதான முகம்மது இப்ராகிம் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவர்களைப் பற்றி விசாரிப்பதற்காக, திருச்சூர் போலீசார் வந்து கொண்டிருப்பதாகக் கூறிய டிஐஜி உமா, ”இந்தச் செய்தி வெளிவந்ததும் மேலும் பல மாநிலங்களில் இருந்து போலீசார் தொடர்பு கொள்வார்கள் என்று நினைப்பதாகவும்” தெரிவித்தார்.
ஏடிஎம் கொள்ளையர்கள் பெயர் பட்டியல் வெளியீடு
கேரள மாநிலத்தில் இருந்து கண்டெய்னர் லாரியில் பள்ளிபாளையம் வந்தவர்களை பள்ளிபாளையம் போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இர்ஃபான், சபீர் கான், சோயீப்கான், மோஹித் இப்ராகிம், முபராக் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஜமாத்தின் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.மேலும் தப்பியோட முயன்ற அஸிரலி என்ற இளைஞர் கோவையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.