ஆசிரியர் பணியை நம்பி இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை அதிர்ச்சியை தந்துள்ளது. அதாவது
தற்போது பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள். ஆனால் அந்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. அரசு அதற்கான வைத்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கூட இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகள் கிடைத்த வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையிலே உள்ளன.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 50 சதவீத இடங்கள் நேரடியாகவும் மீதமுள்ள 48 சதவீத இடங்கள் தகுதி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும்,2 சதவீத இடங்கள் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவிஉயர்வு வழங்குவதன் மூலமும் நிரப்ப 2007 -ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு அரசாணைப்படி இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை. பள்ளி கல்வித்துறையும் மெத்தனம் காட்டி வரும் சூழ்நிலையில் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத இடங்களை நிரப்பவில்லை என பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரணை செய்த நீதிமன்றம் அமைச்சுப் பணியாளர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்காமல் பட்டதாரிஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த சூழ்நிலையில் இந்த வழக்கானது மீண்டும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அதில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் 2014 -15 ஆண்டு முதல் 2024-25 ஆண்டு வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 130 பணியிடங்கள் பணி காலியாக உள்ளது. அரசு சார்பில் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அந்த உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறப்பட்டது.மேலும் இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அரசின் பதிலை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் உரிய பதவி உயர்வு வழங்கப்படாததால் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மனுதாரர்களின் கோரிக்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்து இந்த வழக்கை வருகின்ற 17-ஆம் தேதி ஒத்திவைத்து பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்திற்கான தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுபட்டதாரி ஆசிரியர்களின் தலையில் இடியை இறக்கியதாக வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகள் புலம்பி வருகின்றனர். நீதிமன்றத்தின் அடுத்த விசாரணைக்கு பின்னரே இதற்கான விடிவு காலம் பிறக்கும் என தெரிகிறது.