ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram

பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு புதிதாக, 420 வீடு கட்டிக் கொடுத்துள்ளது. மேலும், 120 வீடுகள் கட்ட பவானிசாகர் பேரூராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு பவானிசாகர் பகுதி அனைத்து கட்சியினர் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பவானிசாகர் மார்க்கெட் சதுக்கத்தில், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், இ.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. பவானிசாகர் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, காங்., வட்டார தலைவர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில், 300 குடும்பம் மட்டுமே உள்ளது. ஆனால், இங்கு, 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதால், பல்வேறு குற்ற செயல் நடைபெறுவதோடு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.

எனவே, இங்குள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை குறைத்து வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலனில்லை. ஏற்கனவே, 420 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு வீடு கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், 120 வீடு கட்ட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளது போல் பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில் உள்ள ஆயிரம் குடும்பங்களை, 300 குடும்பங்களாக குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 15ம் தேதி பவானிசாகர் பேரூராட்சியில் அனைத்து வீடுகளிலும் கறுப்பு கொடியேற்றி எதிர்ப்பை தெரிவிப்பதோடு, கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்
.jpeg)
இந்த கூட்டத்தில் பா.ஜ., – கொ.ம.தே.க., – மா.கம்யூ.,- வி.சி., கட்சி, பஞ்.,தலைவர்கள், யூனியன் கவுன்சிலர்கள் மற்றும் பவானிசாகர் அண்ணா நகர் கடை வியாபாரிகள் சங்கம், அனைத்து வணிகர் சங்கம், மூத்த குடிமக்கள் சங்கம், கட்டட பொறியாளர் சங்கம், ஒய்ஸ்மென் கிளப், பொதுப்பணித்துறை ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர்.