ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் ப.ஈஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு:
பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிகோவில், ஈரோடு மேற்கு ஒன்றியப் பகுதியில் அதிகமாக மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. வரும் 20-ஆம் தேதி காலாண்டுத் தோ்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில், ஈரோடு – கவுந்தப்பாடி செல்லும் அரசுப் பேருந்துகளான ‘8 ஈ, 8டி’ ஆகியவை நசியனுாரில் இருந்து சாமிகவுண்டம்பாளையம் பிரிவு, குருச்சான்வலசு, அலமேடு, குமரன்மலை, காஞ்சிகோவில் வழியாக செல்கின்றன.
கடந்த, 3 மாதங்களாக காலை 11 மணி, பிற்பகல்1.30 மணிக்கு வந்து செல்லும் பேருந்துகள் முறையாக வருவதில்லை. காலாண்டுத் தோ்வுகள் காலை, பிற்பகல் என உள்ளதால் காலையில் தோ்வு எழுதியோா் வீடு திரும்பவும், பிற்பகல் தோ்வுக்கு செல்வோா் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தோ்வு காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம், அவ்வழியாக நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கவும், பள்ளி மாணவ, மாணவிகள் தடையின்றி காலாண்டுத் தோ்வுகளை எழுதவும் உதவ வேண்டும் என்றாா்.
தடுப்புச் சுவரை சீரமைக்கக் கோரிக்கை:
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளா் மயில்துரையன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:
கோபி – அத்தாணி நெடுஞ்சாலையில் ச.கணபதிபாளையம் பகுதியில் 500 குடும்பங்கள் உள்ளன. இங்கு, நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட தடுப்புகள் முற்றிலும் சேதமடைந்து, தொங்கும் அவல நிலையில் உள்ளன. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பேருந்து வசதி தேவை:
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பவானிசாகா் ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு:
சத்தியமங்கலம் வட்டம், நட்டூா் ராமநாதபுரம் மற்றும் பழையூா் பகுதியில் அதிக அளவில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் விவசாய கூலி, கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு செல்லும் மக்கள் அதிக அளவில் உள்ளனா். இக்கிராமத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் சுமாா் 3 கி.மீ. தொலைவு சென்று பேருந்து ஏறிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, இக்குடியிருப்புப் பகுதிக்கு அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்றனா்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.