நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram

போதை கும்பலால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதுப்புதுவிதமாக கொடூர சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பு. உடையர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் உள்ள சாலையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது.

அச்சமயம், அவ்வழியாக வந்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சாமிதுரையின் மகன் செல்லத்துரை (வயது 27), நடுரோட்டில் மதுபானம் அருந்திய நபர்களை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் செல்லத்துரையை ஒன்றுசேர்ந்து இரும்பு உட்பட பயங்கர ஆயுதத்தால் கடுமையாக தாக்கி இருக்கிறது.
சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை:
இதனால் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். செல்லத்துரையை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவரின் உறவினர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், செல்லத்துரையின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டு இருந்தது. இதனிடையே, செல்லத்துரையை தாக்கியதாக இன்று 6 பேர் கைது செய்யப்பட்டனர்.