நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram
பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் குடியிருப்பில் பதுங்கியிருந்த கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் சத்யா நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கென்யாவை சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தனர். ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் மொத்தமாக துணிகளை வாங்கி, விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 4 அதிகாரிகள், பள்ளிபாளையம் வந்தனர்.
அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் கென்யா நாட்டு இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து, அதிரடியாக உள்ளே நுழைந்து விசாரணை நடத்தினர்.தகவலறிந்து பள்ளிபாளையம் போலீசார் வந்து அந்த அதிகாரிகளை சந்தித்து பேசினர். கென்யா இளைஞர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விசா காலம் முடிந்தும், இந்தியாவில் தங்கியிருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒரு மணிநேரம் அறைக்குள் இருந்த கென்யா இளைஞரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது கைகளை கட்டி பாதுகாப்பாக தங்கள் வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்றனர். பெங்களூருவில் கடந்த சில மாதங்கள் முன்பு கென்யாவை சேர்ந்த சர்வதேச போதை பொருள் கும்பல் பிடிபட்டுள்ளது. இந்த கும்பலை போலீசார் கைது செய்து காவல் படுத்தினர். இதில் ஜாமினில் வெளிவந்த நான்கு பேர், மீண்டும்வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
கோர்ட் உத்தரவுபடி தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க விசாரணை மேற்கொண்டனர். இதில் நான்கு பேர் பள்ளிபாளையத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதில் ஒருவன் மட்டுமே சிக்கியுள்ளான். மற்ற மூவரும் வேறு பகுதியில் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக, சிக்கிய கென்யா இளைஞரை போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.