செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram
புதுடில்லி: மோசடி வழக்கில் 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.கடந்த 2011 – 16 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி,48. போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, அவர் மீது மூன்று குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்திருந்தனர்.
இதன் அடிப்படையில் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைது செய்தது. அவர் மீது, 3,000 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த ஆண்டு ஆக., 12ல் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள், தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து செந்தில்பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு விசாரித்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, சித்தார்த் லூத்ரா ஆஜராகினர். அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா, ஜோஹாப் ஹுசைன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று(செப்.,26) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.அப்போது நீதிபதிகள், ”புலன் விசாரணை தாமதத்தால் ஜாமின் வழங்கப்படுகிறது. தாமதமான விசாரணையும், கடுமையான நிபந்தனைகளும் ஒன்றாக இருக்க முடியாது. 2,500 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அதனை விசாரித்து முடிக்க பல ஆண்டுகள் ஆகும். அதுவரை சிறையில் இருக்க அவசியமில்லை.
செந்தில்பாலாஜி விவகாரத்தில் விசாரிக்கப் போகும் விஷயங்களை மனுவாக அமலாக்கத்துறை முன்வைக்கலாம். விசாரணை என்ற பெயரில் ஒருவரை நீண்ட நாட்கள் சிறையில் வைத்து இருக்க முடியாது. ” என கருத்து தெரிவித்தனர். இதையடுத்து 15 மாத சிறைவாசத்துக்கு பின் செந்தில் பாலாஜி விடுதலை ஆகிறார்.
மேலும், அவருக்கு ஜாமின் வழங்க நீதிபதிகள் விதித்த நிபந்தனைகள் பின்வருமாறு:* வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டும். சாட்சி, ஆதாரங்களை கலைக்க முற்படக்கூடாது.ரூ.25 லட்சத்திற்கான சொந்த ஜாமின் தொகை வழங்க வேண்டும். அதற்கு இணையாக இரு நபர்கள் உத்தரவாதம் வழங்க வேண்டும்.
விசாரணை கைதியாகவே இருப்பதால் அடிப்படை உரிமை கருதி நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.சாட்சிகளை சந்தித்து பேசக்கூடாது.எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும். வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுகிறது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
உரிய காரணங்கள் இல்லாமல் வாய்தா கோர கூடாது.விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
வழக்கறிஞர் பேட்டி:
ஜாமின் தொடர்பாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறியதாவது: செந்தில்பாலாஜி இன்று மாலை அல்லது நாளை சிறையில் இருந்து வெளியே வருவார். அவர் அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும், கட்டுப்பாடும் இல்லை. இதற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அடிப்படை உரிமைக்கு எதிராக சிறையில் வைக்கக்கூடாது என நீதிபதிகள் அழுத்தம் திருத்தமாக கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு அதிகரிப்பு:
செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து, புழல் சிறை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.