அரசியல் பொதுநலமாக இருக்கும் வரை ஊழலுக்கு இடமில்லை! அதுவே,
அரசியல் சுயநலமாக மாறும்போது ஊழல் உருவாகிறது!

— மக்கள் அதிகாரத்தின் விழிப்புணர்வு கட்டுரை .

அரசியல் என்பது வெறும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி அல்ல. அது மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் மிகப்பெரிய பொறுப்பு.
மேலும்,ஒரு அரசியல்வாதி பதவிக்கு வரும்போது, அவர் தனக்காக மட்டுமல்ல,அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ,பணியாற்ற வேண்டிய கடமை அவருக்கு உள்ளது.
தவிர,அரசியலின் அடிப்படை நோக்கம் பொது நலமாக இருந்தால், ஊழலுக்கு எதிரான தடுப்பு உருவாகிறது. அரசியல் சுயநலமாக மாறும்போது, அதிகாரம் தனிப்பட்ட லாபத்திற்கான கருவியாக மாறும் அபாயம் உருவாகிறது.

மேலும்,பதவி என்பது சொத்து சேர்ப்பதற்கான மக்கள் கொடுத்த வாய்ப்பு அல்ல. ஆனால், இதை மக்கள் கொடுத்து வாய்ப்பாக தான் தங்கள் குடும்பத்திற்கு சொத்துக்களை சேர்த்துக் கொள்கிறார்கள். உத்தமர்கள் என்று பேசிக்கொண்டு, ஊழல்வாதிகள் என்று பெயர் எடுக்கிறார்கள். மக்கள் சுயநலவாதிகளுக்கும் ,பொதுநலவாதிகளுக்கும் ,அர்த்தம் தெரியாமல் வாக்களிப்பது தான் மிகப்பெரிய தவறு.மேலும்,

அது மக்களின் பணத்தையும், அரசு வளங்களையும், அதிகாரத்தையும், பொறுப்புடன் கையாள வேண்டிய ஒரு நம்பிக்கையான பொறுப்பை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பொதுநல அரசியல்வாதிகள் உணர்ந்து செயல்படுவார்கள்.
ஆனால் ,அரசியலில் பணம், அதிகாரம், பதவி, குடும்ப ஆதிக்கம், தனிப்பட்ட செல்வாக்கு ,ஆகியவை பொதுநலத்தைவிட ,முக்கியமானதாக மாறும்போது, ஜனநாயகத்தின் தரம் பாதிக்கப்படுகிறது.

மேலும்,ஊழல் எங்கே தொடங்குகிறது?
ஊழல் என்பது பணம் வாங்குவதில் மட்டும் தொடங்குவதில்லை.
தகுதியானவர்களை அரசியலில் புறக்கணித்து தன்னுடைய நெருக்கமானவருக்கு வாய்ப்பு கொடுப்பது, அதிகாரத்தை தனிப்பட்ட செல்வாக்குக்குப் பயன்படுத்துவது, அரசு முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது, பொதுமக்களின் கேள்விகளுக்கு கணக்கு கொடுக்க மறுப்பது போன்றவையும், அரசியல் ஒழுக்கத்தின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாகும். மேலும்,

இதை வருங்கால இளைஞர்கள் அவசியம் இந்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், தனக்கு எல்லாம் தெரியும் என்ற கருத்திலும் ,இருக்கக் கூடாது. மேலும், செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டு, பொழுது போக்குவது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்தையும் நீங்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு பதிலாக உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களே எதிர்கால முன்னேற்றத்தின் சிறப்பானவர்களாக வர முடியும்.

மேலும், அரசியலில்! ஊழலை எதிர்ப்பது என்பது “லஞ்சம் வாங்காதே” என்று சொல்வதோடு முடிந்துவிடக்கூடாது.
“அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதே !மக்களின் பணத்திற்கு கணக்கு கொடு, முடிவுகளில் வெளிப்படையாக இரு! என்பதும் அரசியல் நெறிமுறையின் அடிப்படையாக இருக்க வேண்டும்.
மக்கள் என்ன செய்ய வேண்டும்?

ஜனநாயகத்தில் அரசியல்வாதிகளுக்கு மட்டும் பொறுப்பு இல்லை. வாக்காளர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
ஒரு வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை மட்டும் பார்க்காமல்,அவருடைய தகுதி என்ன?
அவருடைய பொதுச்சேவை என்ன?
அவருடைய நேர்மை எப்படி?
மக்களுக்கான அவருடைய பார்வை என்ன?அதிகாரத்தில் இருந்தால் அவர் எவ்வாறு கணக்கு கொடுப்பார்?
என்ற கேள்விகளை மக்கள் கேட்க வேண்டும்.
பணம், பரிசு, சாதி, மதம், தனிப்பட்ட உறவு அல்லது உடனடி சலுகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பதைவிட, நாட்டின் மற்றும் மாநிலத்தின் நீண்டகால நலனை அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பதே ஜனநாயகத்தின் உயர்ந்த பண்பாகும்.
அரசியல்வாதிகளிடம் மட்டும் கேள்வி கேட்பது போதுமா?

இல்லை.அரசியலைச் சுற்றியுள்ள ஒவ்வொரு அமைப்பும் ,தன்னுடைய பொறுப்பை உணர வேண்டும்.
அரசியல்வாதிகள் — மக்களுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.
அதிகாரிகள் — சட்டப்படி நிர்வாகம் செய்ய வேண்டும்.
ஊடகங்கள் — அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் — மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும்.

மேலும்,மக்கள் — உண்மையை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்.
இவை அனைத்தும் வலுவாக இருக்கும்போதுதான், ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கும்.
அரசியல் என்பது யாருக்காக?
இந்தக் கேள்விக்கான பதில்தான் அரசியலின் தரத்தை நிர்ணயிக்கிறது.
அரசியல் தனிநபருக்காக என்றால் — சுயநலம்.
அரசியல் குடும்பத்திற்காக என்றால் — அதிகாரக் குவிப்பு.
அரசியல் பணத்திற்காக என்றால் — ஊழலுக்கான வாய்ப்பு.
அரசியல் மக்களுக்காக என்றால் — பொதுநலம்.
எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறது என்பதைக் காட்டிலும், அந்த ஆட்சி எவ்வளவு வெளிப்படையாகவும், நேர்மையாகவும், பொதுநல நோக்குடனும் செயல்படுகிறது என்பதே முக்கியம்.
முடிவு
மக்கள் அரசியலை மாற்ற வேண்டும் என்றால்!

முதலில் அரசியலைப் பற்றிய தங்களுடைய எதிர்பார்ப்பை மாற்ற வேண்டும்.எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற கேள்வியிலிருந்து,
“என் சமூகத்திற்கு என்ன கிடைக்கும்?”
என்ற கேள்விக்கு மக்கள் நகர வேண்டும்.

அதேபோல், அரசியல்வாதிகளும்,
எனக்கு எவ்வளவு அதிகாரம்? என்பதிலிருந்து,
மக்களுக்காக நான் எவ்வளவு பொறுப்புடன் செயல்படுகிறேன்?
என்ற நிலைக்கு வர வேண்டும்.
அப்போதுதான் அரசியல் உண்மையான பொதுநல அரசியலாக மாறும்.

அரசியலின் உயரம் பதவியில் இல்லை,பொதுநலத்தில் இருக்கிறது. அதிகாரத்தின் மதிப்பு அதைப் பெறுவதில் இல்லை,அதை மக்களுக்காக பயன்படுத்துவதில்தான் இருக்கிறது.
மக்கள் அதிகாரத்தின் கேள்வி!
அரசியல் பொதுநலமா?
அல்லது சுயநலமா?
முடிவு செய்ய வேண்டியது — மக்கள்!
